பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (25) என்ற மகன் இருந்தார். இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான ஒதியத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதையடுத்து குன்னம் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.
அதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ராஜ்குமார் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து ராஜ்குமாரின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.