திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சல் பெருமணல் பகுதியில் போஸ்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரான அந்தோணி சுமிதா(24) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பார்த்தசாரதி(29) என்பவரை சுமிதா காதலித்து வந்துள்ளார். இருவரும் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்த போது காதலித்து வந்துள்ளனர். தற்போது பார்த்தசாரதி மும்பையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து அறிந்த சுமிதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சுமிதாவை கூடுதழையில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். இது பற்றி சுமிதா தனது காதலனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கடத்தி வைக்கப்பட்டுள்ள தனது காதலியை மீட்டு தருமாறு பார்த்தசாரதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சுமிதாவின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுமிதா தனது காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததால் போலீசார் அவரை பார்த்தசாரதியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.