பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தருமத்துப்பட்டி யில் முருகன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற இளம்பெண் தருமத்துப்பட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் போது முருகனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து புதுமணத் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முருகனின் பெற்றோருடன் புதுமணத் தம்பதியினரை அனுப்பி வைத்தனர்.