கடலூர் மஞ்சங்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வேதவி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரேசன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். இதற்காக மாத வாடகை செலுத்தியுள்ளார். இந்த சூழலில் அவர் கடந்த சில வருடங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் 5 லட்சத்திற்கும் மேல் பாக்கி நிலுவையில் இருக்கிறது.
இதனை அடுத்து அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் போலீசார் பாதுகாப்புடன் அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க சென்றுள்ளனர். அப்போது சுந்தரேசன் எதிர்ப்பு தெரிவித்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சி செய்தார். இதனை பார்த்த போலீசார் அவர் மீது தண்ணியை ஊற்றி உள்ளனர். இதனை அடுத்து அவரிடம் போலீசார், அலுவலர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவர் வீட்டில் இருந்த பொருட்களை காலி செய்துள்ளனர்.
அதன் பின் அந்த வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர். இது பற்றி சுந்தரேசன் பேசும்போது அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தி விட்டேன். ஆனால் கூடுதலாக பணம் கேட்கின்றார்கள். நான் அலுவலகத்தில் கொடுத்த பதிவேடுகளை மறைத்து விட்டார்கள். மேலும் அந்த பதிவேடுகளை மறைத்து எனது வீட்டை அதிகாரிகள் சீல் வைத்து விட்டார்கள் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.