தலைமை காவலரிடம் தகராறில் ஈடுபட்ட பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் தனியார் வங்கி ஊழியரான ரேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புது வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்நிலையில் செல்வி மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே 5 சவரன் தங்கச் சங்கிலி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இந்த திருமணம் நின்றதால் விரக்தியிலிருந்து செல்வி அடிக்கடி தன்னுடைய காதலன் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். இவர் வழக்கம் போல் நேற்றும் தன்னுடைய காதலன் வீட்டிற்கு சென்று தகறாறு செய்துள்ளார். அப்போது ரேவேந்திரன் வீட்டில் இல்லாததால் செல்வி அவருடைய பெற்றோரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டுள்ளார். இதனால் ரேவேந்திரனின் பெற்றோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி திருவொற்றியூர் தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்ட செல்வியை சமாதானப்படுத்துவதற்கும் முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாத செல்வி தொடர்ந்து பிரச்சனை செய்ததால் சரவணன் தன்னுடைய செல்போனில் அதை வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி சரவணனின் கையை கடித்து வைத்ததோடு அவர் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் மகளிர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வியை கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இளம்பெண் ஒருவர் காவலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.