அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டி கட்டியாக தங்க நகைகள், வைர நகைகளும், சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் எனக்குச் சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.
அதில் தங்க நகைகள், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. என்னிடம் மொத்தம் 300 சவரன் நகை மட்டும் தான் இருந்தது. கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது உண்மை கிடையாது. என்னிடம் மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் இருந்தது. அதையும் என்னிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் திருப்பிக் கொடுத்து விட்டனர். என் வீட்டின் முன்பு முறைகேடாக மணல் குவித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அது நான் வீடு கட்டுவதற்காக ரசீதுடன் வாங்கி வைத்துள்ளேன்.
அதையும் சரி பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டனர். அதே போன்று சிறு வயது முதலே எனக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என்னிடமிருக்கும் கார்கள் அனைத்துக்குமே கணக்கு சரியாக உள்ளது. என்னிடம் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணமும் இல்லை, நிலமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளங்களில் என்னிடமிருந்து கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் பரவுகிறது இது என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.