விமான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூர் செல்ல நேற்று இரவு 9.45 மணிக்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 98 பயணிகள் உள்பட 104 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் ஓடு பாதையில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்து வரப்பட்டது. இதனையடுத்து அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டு பயணிகள் விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதனை அடுத்து 4 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவித்தனர். ஆனால் 4 மணிக்கும் விமானம் புறப்படாததால் ஏமாற்றமடைந்த பயணிகள் ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி வழங்கப்பட்டது. சரியான நேரத்தில் விமானி எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செல்ல வேண்டிய பயணிகள் விமான நிலையத்தில் பல மணி நேரமாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.