அனுமதியின்றி இயங்கி வந்த கருத்தரித்தல் மருத்துவமனைக்கு அரசு சீல் வைத்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் கருத்தரிப்பும் மற்றும் குழந்தையின்மை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் நடத்திவருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று நடத்திய ஆய்வுகளில் அந்த மருத்துவமனை எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வருவது உறுதியானது.
இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால் சுகாதார பணி இணை இயக்குனர் லட்சுமணன், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்புசெழியன், இந்திய மருத்துவ கழக உறுப்பினர் தியாகராஜன் மற்றும் குடும்ப நலத் துறையின் துணை இயக்குனர் அசோகன் ஆகியோர் நேற்று அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று அதற்கு சீல் வைத்தனர்.
அரசிடம் அனுமதி பெறாமல் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அனுமதி பெறாமல் மருத்துவமனையை நடத்திவந்த நிர்வாகத்தின் மீதும் சுகாதாரத் துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்தால் அது தண்டனைக்குரியதாகும்.