செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உங்களிடம் பேசியபோது, ஏதோ இந்த ஆட்சி வந்து ஆறு மாதத்திற்கு உள்ளாக போதைப்பொருட்களுடைய நடமாட்டம் கூடி விட்டதாகவும், குட்கா போன்ற போதை பொருட்கள் எல்லாம் நடமாட்டத்திலே அதிகமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
நீங்கள் எண்ணி பார்த்தீர்கள் என்று சொன்னால் குட்கா என்ற போதைப் பொருட்கள் இருப்பதையே இந்த தமிழ்நாடு மக்களுக்கு பிரபலபடுத்தப்பட்ட ஆட்சி இருக்கிறது என்று சொன்னால் அந்த ஆட்சி திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடந்த, கடந்த 5 ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சி. அந்த ஆட்சியில்தான் குட்கா போதைப் பொருட்களுக்காக என்னவெல்லாம் நடைபெற்றது.
அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள், அன்றைக்கு இருந்த அதிகாரிகளெல்லாம் எந்த அளவிற்கு அவர்களுடைய புகழ் நாடு முழுவதும் பரவி, இன்னும் சொல்லப்போனால் சந்தி சிரித்த ஆட்சி அதிமுக ஆட்சி போதைப்பொருட்கள் விஷயத்திலே… அதைப்பற்றி இன்று போதை பொருட்களை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது அவரது தலைமையில் இருக்கக்கூடிய, இணை தலைமையில் இருக்கக்கூடிய அதிமுகவிற்கு எந்த வகையில் அருகதை இருக்கு என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.
அதேபோல் அவர் பேசுகின்ற பொழுது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் பெருகிவிட்டதாக கூறியுள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்களே, எத்தனையோ இளம் குழந்தைகள், சிறு குழந்தைகள் கதறி அழுதார்களே, அதெல்லாம் யார் ஆட்சி காலத்தில் நடந்தது ? என்பதை எடப்பாடி அவர்கள் மறந்து விட்டாரா ?
அவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட்டது திமுகவின் ஆட்சியில் தான் என்பதை எடப்பாடி அவர்கள் மறைக்கப் பார்க்கிறாரா? கதற கதற இளம்பெண்களை எல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட ஆட்சி, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ?
அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டால் ஒன்றுமில்லை. அன்றைக்கு அதிலே யார் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்களை இன்றைக்கு மிகப்பெரிய பொறுப்புகளில் கொண்டு வருவதற்கு அவர்கள் பார்த்தார்கள் என்பது தான் உண்மை என்பதை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.