திராவிட கழகத்தின் தலைவர் கீ. வீரமணியின் 90 வது பிறந்தநாள் விழாவானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கி. வீரமணியை பாராட்டி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நூற்றாண்டை கடந்தும் வீரமணிக்கு பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடுவோம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறேன்.
அதுதான் என்னுடைய முதல் சிறை அனுபவம். அப்போது என்னுடைய வயது 23. எனக்கு முன்னதாக ஆசிரியர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். நான் காவலர்களால் பலமாக தாக்கப்படுகிறேன். அப்போது என் மீது விழுந்த பெரும்பாலான அடிகளை தன்னுடைய உடம்பிலேயே தாங்கியவர்கள் மறைந்த சிட்டிபாபு மற்றும் ஆசிரியர் வீரமணி தான். அந்த சமயத்தில் இன்று இருப்பதை விட மிகவும் மெலிந்த உருவமாக இருந்தேன்.
அப்போது என் மீது விழுந்து அடியை தாங்கி மன தைரியத்தை கொடுத்தவர்தான் ஆசிரியர் வீரமணி. தன்னுயிரையும் காத்து என்னுடைய உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர். திராவிட இயக்கம் என்பது ஒரு கட்சி அல்ல; இது ஒரு கொள்கை உணர்வு. திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை யாராலும், எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. இனியும் முடியாது. திராவிட இயக்கம் வளரும்; வளர்ந்து கொண்டே இருக்கும். யாராலும் தடுக்கவும், அழிக்கவும் முடியாது என்றார்.