வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மனைவி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் வசித்து வரும் ராமர் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கலைநிவேதியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கலைநிவேதியா மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கடந்த 13 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் மீன் பிடி தொழில் செய்து வந்துள்ளார். 6 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறைக்கு ஊருக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 4ஆம் தேதி ராமர் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் எப்படி உயிரிழந்தார் என எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து ராமரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி கோரிக்கை அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசு எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலைநிவேதியா மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கணவனை இழந்து 2 கைக்குழந்தைகளுடன் தவித்து வரும் எனக்கு அரசின் நிவாரண நிதியும், வேலை வாய்ப்பும் வழக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.