ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுவதாக தெலுங்கானாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பால் எந்தவித பயனும் இல்லை எனவும், இதில் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுவதுடன் அவர்களுக்கு கல்வி மேல் இருக்கக் கூடிய ஆர்வம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மன உளைச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுவதாக ஆய்வின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.