காற்றடித்து கோப்பை சரியும்போது அதனை லாவகமாக தூக்கிய வில்லியம்சன் அது தங்களுக்கு தான் என பாண்டியாவிடம் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. 2ஆவது மற்றும் 3ஆவது டி20 போட்டி 20 மற்றும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா அணிக்கு தலைமை தாங்குவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு நாள் தொடரில் ஷிகர் தவானை கேப்டனாக செயல்படுவார். அதேபோல ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டி20 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்களும் வழக்கமாக கோப்பையின் அறிமுக விழாவில் பங்கேற்றனர். ஹர்திக் பாண்டியா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க தயாராக நின்று கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியது. இதனால் கோப்பை வைக்கப்பட்டிருந்த அட்டை சரிய, அதில் இருந்த கோப்பையும் கீழே விழப்போன நிலையில், உடனே அதனை கவனிக்க வில்லியம்சன் கோப்பையை இடது கையால் லாவகமாக தூக்கினார்.
ஹர்திக் பாண்டியா தனது பக்கம் இருந்த அட்டையின் பாகம் பிரியாதபடி பிடித்துக் கொண்டார். கேன் வில்லியம்சன் கோப்பையை எடுத்தபின் ‘கோப்பை எங்களுக்கு தான்’ என சொல்வது போல பாவனை செய்து பாண்டியாவிடம் சிரித்தபடி தெரிவித்தார். இதனை கேட்ட பாண்டியாவும் பதிலுக்கு சிரித்த படியே நின்றார். இந்த வீடியோவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..
"I'll have that!" 🙌 🏆 #NZvIND #CricketNation pic.twitter.com/KiQL8IkzUK
— BLACKCAPS (@BLACKCAPS) November 16, 2022
நியூசிலாந்துக்கு எதிரான டி20 இந்திய அணி :
ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கி ), சஞ்சு சாம்சன் (வி.கீ ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
இந்தியாவுக்கு எதிரான டி20 நியூசிலாந்து அணி :
கேன் வில்லியம்சன் (கே ), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (வி.கீ ), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, பிளேயர் டிக்னர்