சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், நான் கோபாலபுரத்து குடும்பத்தின் உடைய விசுவாசி. இங்கே உட்கார்ந்திருப்பது மதிப்பிற்குரிய மு.க ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல, இங்கே நான் காண்பது என் தலைவனுடைய முகம்தான். எனவே நான் இந்த மன்றத்திலே உட்கார்ந்திருக்கிறேன் என்று சொன்னால், ஒவ்வொரு நிமிடமும் அதை நினைத்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
அந்த நினைவோடு தான் ஒரு நாள் அல்ல, ஒரு நிமிடம் அல்ல கிட்டத்தட்ட எண்பத்தி ஒன்பதிலிருந்து திமுக எப்போது எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த துறையை என்னிடத்தில் தான் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பொதுப்பணித் துறையை உலக வங்கியின் வற்ப்புறுத்துவத்தால், இன்றைக்கு நீர்வளத்துறை என்றும், பொதுப்பணித்துறை என்றும் பிரித்திருக்கிறார்கள்.
எந்த துறை எப்படி பிரித்தாலும் நான் அவரிடத்தில் கூட கேட்டேன், எனக்கு நீர்வளத்துறை தான் வேண்டும் என்று கேட்டேன். ஏனென்றால் இந்தத் துறை எனக்கு ஊனோடும் உயிரோடும் கலந்து விட்ட ஒரு துறையாகவே நான் கருதுகிறேன். ஆகையினால் இந்த துறையில் நான் பணியாற்றுவது என் தலைவர் தந்த அந்தப் பெருமை என்று கருதிக்கொண்டு இன்றைக்கு உங்கள் இடத்திலேயே நீங்கள் பேசுகின்ற போது இதையெல்லாம் கேட்டு பதில் அளிக்க கூடிய பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.