பெரம்பலூரில் செல்போனுக்கு ஆசைப்பட்டு வாலிபர், சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புகுமார் (11) என்ற மகன் இருந்தான். இவன் ஆறாம் வகுப்பை அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்புகுமார் தனது நண்பர் விட்டிற்கு போவதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பல இடங்களுக்கும் சென்று அன்புகுமாரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அன்புகுமார் கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் சடலமாக கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர் தண்ணீரில் இருந்து சிறுவனுடைய உடலை மீட்டனர். அப்போது சிறுவனின் கைகள் மற்றும் வாயில் காயம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர் மகனை யாரோ கொலை செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனை யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் வி.களத்தூர் ராயப்பா நகரில் வசித்து வரும் தர்மலிங்கம் என்பவரது மகன் தனுஷ் (19) தான் சிறுவனை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அன்புகுமார் வைத்திருந்த செல்போன் மீது தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து செல் போனில் “கேம்” ஏற்றி தருவதாக கூறி அன்புகுமாரை அழைத்து சென்றுள்ளார். அதன் பின் கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து சிறுவன் வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றதாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து தனுஷ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.