காவலாளியை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு குடோனில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ராமன் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுமை தூக்கும் தொழிலாளியான சந்திரன் என்பவர் அங்கு சென்றுள்ளார். அப்போது சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு ராமனிடம் தகராறு செய்துள்ளார். அதன்பின் கோபத்தில் சந்திரன் ராமனை அடித்து உதைத்துள்ளார்.
மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து ராமனின் தலையில் போட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 2018-ஆம் ஆண்டு சந்திரனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.