காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் கணவன் மீது புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாரத் சிங்கிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினைகள் நடைபெறுவதாகவும், எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார். இதற்கு உதவி செய்வதாக கூறி பாரத் சிங் அடிக்கடி அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார்.
இதனை நம்பிய அந்தப்பெண் காவல் நிலையத்திற்கு சென்றபோது பாரத் சிங் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூர் மண்டல காவல் துறைத் தலைவர், அல்வார் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் பாரத் சிங் தான் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.