இந்திய அணியில் உள்ள வரை என் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நான் எல்லா விதமாகவும் முயற்சி செய்து பார்த்தேன் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்தபோது, “என்னால் முடிந்த அளவு அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன் அப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை சச்சின், டிராவிட் லட்சுமண், சேவாக், கம்பீர், யுவராஜ் என நிரம்பி இருந்தது. நான் அப்போது என்னுடைய பந்துவீச்சில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். அப்போது அணியில் ஆல் ரவுண்டர் இடம் காலியாக இருந்தது. ஏனென்றால் நான் ஓரளவுக்கு ஆப் ஸ்பின் நன்றாகவே வீசுவேன் உள்ளூர் போட்டிகளில் விக்கெட் எடுத்து இருக்கிறேன், அப்போது எனக்கு உதவுவதற்கு யாரும் கிடையாது.
அதனால் என்னுடைய பேட்டிங்கில் தான் நான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினேன். ஆல் ரவுண்டராக இருந்திருந்தால் ஆறாவது அல்லது ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு இருந்திருக்கும், அணியின் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இருந்திருப்பேன். அணியில் இருந்த வரை என்னுடைய பங்களிப்பை முடிந்தளவுக்கு கொடுத்துள்ளேன்” என பத்ரிநாத் கூறியுள்ளார். தமிழக அணிக்காக 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த பத்ரிநாத் ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 95 போட்டிகளில் 1441 ரன்கள் குவித்த பத்ரிநாத்தின் சராசரி 30.65. டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று நிராகரிக்கப்பட்ட இவர் ஐபிஎல்
டி20 தொடரில் சிஎஸ்கேக்காக ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.