பெண்ணை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் வீட்டின் அருகே அமைந்துள்ள பெட்டி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேர் வந்து கார்த்திக்கிடம் மது குடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் கார்த்திக் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த சித்ராவிடம் மது குடிப்பதற்கு 200 ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் சித்ரா பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் சித்ராவை அவதூறாக பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சித்ரா விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்து சித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.