இன்ஜினியரின் வீட்டின் முன்பு வியாபாரி தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லயன் பகுதியில் தண்டபாணி-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் தள்ளுவண்டியில் உணவு விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஆர்.எம். காலனி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் வீடு கட்டுவதற்காக சில லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் அவர் கட்டுமான பணியை பாதியில் நிறுத்திவிட்டார்.
இதனையடுத்து தண்டபாணி அவரிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதுகுறித்து தண்டபாணி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தண்டபாணி தனது குடும்பத்துடன் இன்ஜினியரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தண்டபாணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தண்டபாணியின் குடும்பத்தினர் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.