காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியூர் கிராமத்தில் தினகரன்-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்த தினகரன் வாரம் 800 ரூபாய் என 15 வாரங்கள் கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த வாரம் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தினகரன் பணம் கட்டவில்லை. இதனையடுத்து வங்கியில் கடன் வசூலிக்கும் பெண் மொத்த தொகையையும் கட்டுமாறு கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தினகரன் வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகார் அளித்து விட்டு வெளியே வந்த தினகரன் காவல் நிலையம் முன்பு திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.