கோவில் பிரசாதம் தராததால் பூசாரியை ஊர் நாட்டாமை கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் வசித்து வருபவர் 63 வயதான தர்மராஜ். இவர் அருகிலுள்ள தங்கம்மாள்புரம், வடுக நாச்சியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அந்த கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்துள்ளது.இந்த விழா முடிந்ததும் கோவில் பிரசாதத்தை எப்போதும் வழக்கமாக ஊர் நாட்டாமைக்கு கொடுத்து வந்தனர்.
சம்பவத்தன்று அங்கு நட்டாமையாக இருக்கும் அன்பழகனுக்கு கோவில் பூசாரி பிரசாதம் தராததால் ஆத்திரம் அடைந்த அவர் பூசாரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த ஊர் பொதுமக்கள் நட்டாமை அன்பழகனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் கோபம் குறையாத நாட்டாமை அன்பழகன் நேற்று இரவு 11 மணிக்கு பூசாரி வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.இதனால் சத்தம் கேட்டு வெளியே வந்த பூசாரி தர்மராஜன் தலையில் நாட்டாமை ஒளித்து வைத்திருந்த கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பூசாரி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் பூசாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் நாட்டாமை அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.