மதுரை ஜெய் நகரில் தனியார் பள்ளிக்கூடம் அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு முதியவர் இரும்பு கம்பி ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை செய்பவர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் விசாரணையில் இறந்து கிடந்தது மகாபூபாபாளையத்தைச் சேர்ந்த அய்யனார் என்பதும் அவர் பொன்மேனி சுடுகாட்டில் மயான தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டனர். அதில் நள்ளிரவில் அய்யனார் அந்த பகுதியில் நடந்து வருவதும் அப்போது வாலிபர் ஒருவர் அவரிடம் தகராறு செய்வதும் அந்த நபர் அருகில் கிடந்த சுத்தியால் தலை முகத்தில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அய்யனாரை தாக்கிய வாலிபர் பொன்னேனி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் கணேசன்(28) என்பது உறுதி செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு சென்று அவரை மடக்கி பிடித்துள்ளனர். இதில் விசாரித்ததில் ஓசி பீடி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சுத்தியால் அய்யனாரை அடித்து கொலை செய்தது கணேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.