மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது குடும்ப சூழ்நிலையை சதீஷின் பெற்றோர் எடுத்துரைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சதீஷை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.