மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 190 கோடி டாலர் என கூறப்படுகிறது. இவர் தமிழகத்தில் படித்தவர். சமூக வலைதளங்களில் தொழில் சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி சுவாரஸ்யமான தகவல்களை நகைச்சுவையாக பகிர்ந்து வரும் இவரது பதிவுகள் திடீரென வைரலாகும். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் உள்ள 70 ஹேர்பின் வளைவுகளை பற்றி பகிரந்த இவரது டிவிட் அதிக வரவேற்பை பெற்றது.
பொங்கல் திருநாளில் தனது டிவிட்டரில், ‘தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்தேன். நான் முதலில் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை ‘போடா டேய்’ தான். இந்த சொல்லை அடிக்கடி பயன்படுத்தி இருக்கிறேன். உரக்கவும் சொல்லி இருக்கிறேன். சில நேரம் மனதுக்குள் சொல்லி இருக்கிறேன். தமிழ் எப்போதும் திறமையான மொழி. ஆங்கிலத்தில் யாரிடமாவது ‘உங்களின் பேச்சை கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை, என்னை தனியாக விட்டால் உங்களுக்கு பாராட்டுகள் என சொல்வதற்கு தமிழில் ‘போடா டேய்’ என்று சொன்னால் போதும்,’ என பதிவிட்டுள்ளார்.