பிரசாத் ஸ்டுடியோவுக்கு இன்று வருவதாக இருந்த திரு.இளையராஜா, தனது வருகையை தவிர்த்துள்ளார். தான் பயன்படுத்திய அறையின் பூட்டு உடைக்கப்பட்டதாலும், இசைக் குறிப்புகள் காணாமல் போனதாலும் இளையராஜா தனது வருகையை தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவை தனது இசைப் பணிக்காக திரு.இளையராஜா பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில், ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இதில் நீதிமன்றம் சமரசம் செய்து வைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்து தியானம் செய்துவிட்டு இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், பிரசாத் ஸ்டுடியோவிற்கு இளையராஜாவின் வழக்கறிஞர் திரு.தியாகராஜன் மட்டுமே வந்திருந்தார். ஆனால், இளையராஜா வரவில்லை. பிரசாத் ஸ்டுடியோவில் தான் பயன்படுத்திய அறையின் கதவு உடைக்கப்பட்டதாலும், இசைக்குறிப்புகள் காணாமல் போனதாலும் மன உளைச்சலுக்கு ஆளான இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ வருவதை தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.