லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் திருமலைராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டுவதற்காக கட்டிட வரைபட அனுமதி கோரி ஊராட்சி மன்ற செயலர் கதிரேசனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு கதிரேசன் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருமலைராஜன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி திருமலைராஜன் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கதிரேசனை மடக்கி பிடித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கதிரேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.