Categories
மாநில செய்திகள்

எனக்கே அதிகாரம் இருக்கு…… “சாவிக்கு தடை விதிங்க”…… இபிஎஸ் பதில் சொல்லட்டும்….. ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் என இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சாவியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேபோல அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்கு அதிமுக தொண்டர்கள் யாரையுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடகோரிய வழக்கில் அப்பில் மனுவை விசாரணை செய்யும் போது தனது தரப்பையும் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது தலைமை நீதிபதி என்.வி ரமணா வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு முன்னதாக இந்த வழக்கை பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என்று ஓபிஎஸ் தரப்பிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணையை தொடங்கினர். அப்போது, நான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அதிமுக தலைமை அலுவலக அதிகாரம் எனக்கு தான் இருக்கிறது. பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கிறது. எனவே அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. இதனை நிராகரித்த தலைமை நீதிபதி, இபிஎஸ் பதிலளிக்க வேண்டும், வழக்கை முழுமையாக விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாக கூறிய உச்ச நீதிமன்ற தலைமை இறுதி அமர்வு, வழக்கில் எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும், சீல் வைத்த வருவாய்த்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Categories

Tech |