சென்னையில் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடி டி.வி.எஸ் நகர் 5 வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது41). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் கடந்த நான்கு மாதங்களாக கிருஷ்ணகுமார் பாடியில் உள்ள இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி முகப்பேரில் வசிக்கும் ராஜமங்கலம் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், கிருஷ்ணகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நொளம்பூர் போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கிருஷ்ணகுமார் இருவரையும் அழைத்து விசாரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் “நேற்று காலை 11 மணியளவில் கிருஷ்ணகுமார் தனது சாவுக்கு ராஜமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தான் காரணம் என பேசிய வீடியோவை தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பியுள்ளார்”. மேலும் சமூக வலைத்தளத்திலும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் அந்த வீடியோவை பார்த்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதையடுத்து பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. இதுபற்றி கொரட்டூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.