பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிராக்டர் டிரைவரான சுரேஷ்(29) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக சுரேஷூம் அணங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 11-ஆம் தேதி நந்தினி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து நந்தினியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் சுரேஷை நந்தினி திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் பாதுகாப்பு கேட்டு குடியாத்தம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனை அடுத்து போலீசார் நந்தினியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் நந்தினி மேஜர் என்பதால் அவரது காதலரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் நந்தினி சுரேஷூடன் கணவர் வீட்டிற்கு சென்றார்.