அண்ணனை தம்பியே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகில் சங்கிலி நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் மாது. இவருடைய மகன் 45 வயதுடைய வெங்கடேசன். இவர் கோவை, ஈரோடு பகுதியில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தம்பி 40 வயதுடைய விவசாயியான குமார். இவர் இரண்டு மாடு கன்றுக் குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். இந்த இரண்டு மாடு கன்று குட்டிகளும் சமீப காலத்தில் இறந்து விட்டது. அதற்கு அவருடைய அண்ணனும், அண்ணியும் தான் செய்வினை வைத்து கொன்றதாக குமார் பிரச்சினை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் இருந்த அண்ணன் வெங்கடேசன் மற்றும் அண்ணி பெருமா ஆகியோரிடம் சென்று எனது மாட்டை செய்வினை வைத்துக் கொன்று விட்டீர்கள் என்று கூறி பிரச்சனை செய்து விட்டு கோபத்தில் அவர் தன் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடேசன் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த அண்ணி பெருமாவையும் குமார் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வெங்கடேச பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். மேலும் பெருமா நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் பாப்பரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.