சிவகங்கை சிங்கம்புணரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்லூரி முதல்வர் மார்கரெட் பாஸ்டின் மற்றும் கல்லூரி செயலர் சூசை மேரி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றனர். இந்த கல்லூரியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டிகள், கோலப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது.
இதையடுத்து வாக்களிப்பதன் நோக்கம், வாக்களிக்கும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து குறும்படமாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. கோலம் மற்றும் ஓவியப் போட்டிகளை திருப்பத்தூர் தேர்தல் அலுவலர் சிந்து மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ராஜா முகமது, வட்டாட்சியர் திருநாவுக்கரசு, சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர்கள் அருண், சபரி, கதிரேசன் ஆகியோரும் மற்றும் தேர்தல் பணியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.