கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரணநிதிக்கு தனது ஒரு வருட சம்பளத்தை தருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களால் முடித்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது.
இதில் பல்வேறு நிறுவனங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் நிதி உதவி அளித்து வருகின்றனர். அதேபோல, ஒவ்வொரு மாநிலங்களிலும் முதல்வர் நிவாரண நிதி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு மக்களால் முடிந்த அளவிற்கு நிவாரணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக முதல்வர் தனது 1 வருட ஊதியத்தை தருவதாக இன்று அறிவித்துள்ளார். COVID 19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக அரசுக்கு ஏதேனும் ஒருவகையில் பங்களிக்குமாறு குடிமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகத்தில் நேற்று வரை 98 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.