நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த விபத்தை நேரில் கண்ட சிவகுமார் என்பவர் இந்த விபத்து குறித்தும், பிபின் ராவத் குறித்தும் கூறுகையில், “நான் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் என்னுடைய சகோதரரை பார்க்க சென்றேன். அப்போது பெரிய சத்தத்தோடு ஹெலிகாப்டர் ஒன்று இரண்டாக பிளந்து தீப்பிடித்து எரிவதை பார்த்தேன். எனவே உடனடியாக நானும் பக்கத்தில் இருந்தவர்களும் ஹெலிகாப்டர் விழுந்த இடத்திற்கு சென்றோம். இதனையடுத்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன்.
எரிந்த ஹெலிகாப்டரில் இருந்து 3 பேர் காயங்களுடன் விழுந்தனர். ஆனால் உயிருடன் இருந்தார்கள். இவர்களில் ஒருவரை நாங்கள் வெளியே எடுத்தோம். அப்போது அவர் எங்களிடம் தண்ணீர் கேட்டார். பின்னர் அவரை மீட்புக் குழுவினர் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து தான் அவர் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் என எனக்கு ஒருவர் கூறினார். இந்த மனிதர் நாட்டுக்காக பல சேவைகளை செய்துள்ளார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியாத நிலை இருந்ததால் என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.