Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்கூட சேர்த்து வையுங்க…. தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளி மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்கோட்டை கிராமத்தில் கூலி தொழிலாளியான துரைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெட்டியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூலி வேலைக்கு செல்வதாக கூறி துரைப்பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளை கிராமத்திலேயே விட்டு விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். கடந்த ஆண்டு மீண்டும் கல்கோட்டைக்கு வந்த துரைப்பாண்டி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ரெட்டியம்மாள் துரைபாண்டியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதுகுறித்து துரைப்பாண்டி நிலக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் முசுவனுத்து கிராமத்திற்கு சென்ற துரைப்பாண்டி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு அங்கிருந்த மின் கோபுரத்தின் மீது ஏறி சத்தம் போட்டுள்ளார். அதன் பிறகு தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கவில்லை எனில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என துரைப்பாண்டி மிரட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைப்பாண்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ரெட்டியம்மாளை அவருடன் சேர்த்து வைப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு துரைப்பாண்டி கீழே இறங்கி வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |