தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல்(70). இவர் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபரை வாடகைக்கு குடிவைத்துள்ளார். அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேலிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொகையை சக்திவேல் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை.
கடந்த 10ம் தேதி அந்த வாலிபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அப்படியே வெளிநாட்டை சுற்றிப்பார்த்து வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சக்திவேல், ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு அவருடன் சென்றுள்ளார். பின்னர் அங்கு இருக்கும் ஒரு நபரிடம் சக்திவேலை ரூ.7 லட்சத்துக்கு அடமானம் வைத்து அவர் நாடு திரும்பியுள்ளார். இந்த தகவலை சக்திவேல் சென்னையில் வசிக்கும் தனது மகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் சென்னையில் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் இந்த பகீர் சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.