நாகையில் ஒருவர் தன் வீட்டில் விரலிமஞ்சள் மூட்டைகளை கிலோக்கணக்கில் பதுக்கிவைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி என்ற கிராமத்தில் உள்ள உலகநாதன் காடு என்ற பகுதியை சேர்ந்த நபர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் தன் வீட்டில் மூட்டைக்கணக்கில் விரலிமஞ்சள்களை மறைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இலங்கைக்கு கடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர்களின் குழுவானது ஆய்வாளர் ராஜாவின் தலைமையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவரின் வீட்டில் 750 கிலோ விரலிமஞ்சள் மூட்டைகள் 30 மற்றும் 60 கிலோ ஏலக்காய் மூட்டைகள் 3 யும் வைத்திருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவலர்கள் அனைத்து மூட்டைகளையும் பறிமுதல் செய்ததோடு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கஞ்ச மலைகாடு பகுதியை சேர்ந்த சத்யராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.