பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசார் முகமது தெரிவித்துள்ளார்.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து கிளம்பி ஆஸ்திரேலியாவில் பெர்த் நகருக்கு சென்று அங்குள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. அதே சமயம் பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது அவர்களுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள அவர் விரைவில் அணியில் சேர இருக்கிறார். எனவே டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருப்பதாக அந்நாட்டு முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி எப்போது நடந்தாலும் முக்கியமான ஆட்டமாக அது இருக்கும். பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு மிக வலுடன் இருக்கின்றது, ஆனால் பேட்டிங் சற்று வலுவிழந்து இருப்பதால், அதனை மேம்படுத்த வேண்டும். அதேசமயம் இந்தியா தற்சமயம் பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறது.
ஏனெனில் பும்ரா இல்லாதது அவர்களுக்கு ஒரு பெரிய இழப்பு. எங்களது அணியில் ஷாஹீன் அஃப்ரிடி மீண்டும் உடல் தகுதி பெற்று விளையாடினால் எங்களது பவுலிங் கூடுதல் வலுப்பெறும். கடந்த கால ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள் என்பதை பார்க்கின்ற போது அவர்களின் மன உறுதி அதிகமாக இருக்கிறது. எனவே மீண்டும் பாகிஸ்தான் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்..