கமிஷனில் பங்கு கேட்ட தம்பியை உலக்கையால் அடித்து கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மொக்கை என்பவர் வசித்து வருகிறார். இவருக்க மூத்த மகன் ராஜாராம் இளையவர் மாயாண்டி என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜாராம் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். அப்போது வயலின் உரிமையாளர் வயலை விற்க முயற்சித்ததால் ராஜாராமிடம் விற்பனைக்கு ஆள் பிடித்து தருமாறு கேட்டுள்ளார். மேலும் அவருக்கு கமிஷன் தொகையும் கொடுத்துள்ளார். இதனையறிந்த ராஜாராமின் தம்பியான மாயாண்டி அந்த நிலத்தில் தங்களது அப்பாவின் காலத்திலிருந்தே பயிர் செய்து வருவதால் கமிஷன் தொகையில் தனக்கும் பங்கிருக்கிறது என்று அண்ணனிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அண்ணன் அருகிலிருந்த உலக்கையை எடுத்து தம்பியை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பலத்த காயமடைந்த மாயாண்டியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.