பெரும்பாலான மக்கள் பேருந்தில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது அசந்து தூங்கி விடுவார்கள். சிலர் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி இடத்தை பிடித்து தூங்கிவிடுவார்கள். இப்படி பலரும் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்து செல்லும்போது தன்னை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள். ஆனால் இப்படி தூங்குவதற்காகவே ஒரு பஸ் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை… ஹாங்காங் நாட்டில் தூக்கம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்காகவே பிரத்தியேகமாக இந்த டபுள் டெக்கர் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக அல்லாமல், நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகவே பயன்படுத்தி வருகிறார்களாம். இந்த பேருந்து முழுக்க முழுக்க பயணிகள் தூங்குவதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் ஹாங்காங் நாட்டில் இதனை அறிமுகம் செய்த போது அனைவரும் வித்தியாசமாக பார்த்தார்கள். ஆனால் தற்போது பலரும் தூங்குவதற்காக டிக்கெட் எடுத்து இந்த பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள். இந்தப் பேருந்தின் பெயரும் ‘தூங்கும் பஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பேருந்து ஐந்து மணிநேரத்திற்கு 76 கிலோமீட்டர் சுற்றி வருமாம்.
இந்த பேருந்தில் தூங்குவதற்காக வருபவர்களுக்கு 1000 முதல் 3000 வரை டிக்கெட் தருகிறார்களாம். அதுமட்டுமில்லாமல் இந்த பேருந்தில் தூங்குபவர்களுக்கு கண்களுக்கு மாஸ்க் மற்றும் காதுகளில் சத்தம் கேளாமல் இருப்பதற்கு இயர் பிளக் கொடுத்து விடுவார்களாம். இந்த பேருந்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் மிகவும் சவுகரியமாக தூங்குவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து மணிநேரம் பயணம் முடிந்த பிறகு நாம் எந்த இடத்தில் ஏறினோமோ அந்த இடத்திலேயே நம்மை இறக்கி விட்டு சென்று விடுவார்கள். யாராவது தூக்கமில்லை, நிம்மதியான உறக்கம் வேண்டும் என்று எண்ணினால் தாராளமாக இந்த பேருந்தில் பயணிக்கலாம்.