உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் திருமணத்தில் செய்தித்தாளை படிக்க முடியாமல் தவித்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், ஆரய்யா மாவட்டம் அருகே உள்ள ஜமாலி போர் என்ற பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகள் அர்ச்சனா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவம் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிறகு ஜூன் 20ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. திருமண தினத்தன்று மணமகளும், மணமகன் வீட்டாரும் ஆரவாரத்துடன் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தனர். மணமகன் சோபாவில் அமர்ந்திருந்தார்.
அவர் கண்ணாடியை கழட்டாமல் அணிந்தவாறு இருந்தார். திருமணத்திற்கு முன்பு பெண் பார்க்க வரும்போது கூட மணமகன் கண்ணாடியை கழட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மணமகள் வீட்டார் மணமகனுக்கு பார்வை குறைபாடு இருக்குமோ என்று சந்தேகித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் இந்தி செய்தித்தாள் ஒன்றை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்து இதைப் படிக்கச் சொன்னார். ஆனால் அவர் படிக்க முடியாமல் திணறினார். இதைப்பார்த்த மணமகள் திருமணத்தை நிறுத்தி விட்டார். இதையடுத்து படித்தவர் என பொய் கூறி தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.