தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உள் நாட்டுப் பயணத்திற்கான விமானக் கட்டணமானது பன்மடங்கு அதிகரித்து உள்ளது. விலை உயர்வு இருந்த போதிலும் உள்நாட்டு விமானங்களுக்குரிய முன் பதிவுகள் நிரம்பி இருப்பதாகவும், விற்பனைக்கு மிகக்குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நபர்கள் விமானத்தில் செல்வதால் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்து உள்ளது.
தற்போது விடுமுறை காரணமாக வடமாநிலத்தவர் விமானங்களில் செல்வதால், வட மாநிலங்களுக்கு போகும் பயணத்திற்கான விமானக் கட்டணமும் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு ரூபாய்.11,800 டிக்கெட் கட்டணமாக உள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூபாய்.11,500, கோவைக்கு ரூபாய்.10,250 கட்டணமாக இருக்கிறது. சென்னையிலிருந்து கொச்சிக்கு ரூபாய்.9000, சென்னனையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரூபாய்.12000 முதல் ரூபாய்.21000 வரை, சென்னை-கொல்கத்தா ரூபாய்.15,000 முதல் ரூ.17,000 வரை, சென்னை-புதுதில்லி ரூபாய்.12000 முதல் ரூ.18000 வரை கட்டணமாக இருக்கிறது.