சென்னையில் வெளியான டிஜிட்டல் விளம்பரம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய பாலங்களுக்கு கீழேயும் இது போன்ற டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய பாலத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம் என்பது போன்ற அதிர்ச்சியூட்டும் விளம்பரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விளம்பரம் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல் சார்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னையில் விபச்சாரத்துக்கு இவ்வளவு வெளிப்படையாகவா அழைப்பீர்கள்? எனவும் என்னப்பா நடக்குது சென்னையில? எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது விளம்பர பலகையில் வெளியான விளம்பரத்தை ஹோட்டல் ஊழியர் ஒருவர் திட்டமிட்டு ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. அதே சமயம் அந்த ஹோட்டலில் இது போன்ற செயல்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பொது இடங்களில் இனி இதுபோல விளம்பரங்கள் வெளியாகாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.