கொரோனா ஊரடங்கு காலத்தில் ரியல் ஹீரோவாக இருக்கும் ரீல் வில்லன் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலமாக திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினர்களிடைய பாராட்டுக்களை பெற்று வருகிறார். புலம்பெயர்ந்தோருக்கு உதவிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் புத்தகம் ஒன்றை எழுத உள்ளதாக, சோனுசூட் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களப்பணியில் ஈடுபட்டிருக்கும் மும்பை காவல் துறையினருக்கு 25 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கியிருக்கிறார்.
இவரின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மும்பை காவல்துறையினருக்கு 25 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கிய உங்கள் தாராள பங்களிப்புக்கு எங்களது நன்றிகள்” என பதிவிட்டிருந்தார். இவரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சோனு சூட், “உங்களின் அன்பான இந்த வார்த்தைகளால் நான் உண்மையிலேயே கௌரவப்படுத்தபட்டுள்ளேன். காவல்துறை சகோதர சகோதரிகளே எங்களின் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் செய்துவரும் பணி பாராட்டுதலுக்குரியது. அவர்களது பணிக்கு என்னால் முடிந்த உதவி இது ” என்று ட்வீட் செய்துள்ளார்.