தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் மற்றும் வாய்தா போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெசிகா. இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மல்லிகை அவென்யூவில் உள்ள குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நடிகை ஜெசிகா தயாரிப்பாளர் சிராஜுதன் என்பவரை காதலித்தது தெரியவந்தது. அதன்பின் சிராஜுதீனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்த அவருடைய வீட்டில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் சிராஜுதன் காரைக்குடியில் பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.
இதனையடுத்து சிராஜுதன் நேற்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது சிராஜுதனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் போலீசாரிடம் கூறியதாவது, நான் ஜெசிகாவை காதலிக்கவில்லை. அவர்தான் என்னை ஒருதலையாக காதலித்தார். நான் ஒரு நல்ல நண்பராக மட்டுமே இருந்தேன். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை இருந்ததால் வேலப்பன்சாவடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். அதன்பின் சிகிச்சை தொடர்பாக அடிக்கடி எனக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஜெசிகா பேசுவார். நான் வாங்கிக் கொடுத்த செல்போனை எடுத்து வரும்படி என்னுடைய நண்பரிடம் கூறவில்லை.
ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஜெசிகா கடைசியாக என்னிடம் தான் பேசினார். நான் ஜெசிகா தற்கொலை செய்து கொள்வார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஜெசிகாவுக்கு உண்மையாகவே தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததா என்பதை கண்டுபிடிக்க அவர் சிகிச்சை பெற்ற மருத்துவ மனைக்கு சென்று விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் தடவியல் துறைக்கு அனுப்பப்பட்ட ஜெசிகாவின் செல்போன் முடிவுகள் வந்த பிறகுதான் அவருடைய மரணம் ஒரு முடிவுக்கு வரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.