சிதம்பரத்தில் பிறந்த குழந்தை தனது சாயலில் இல்லை என்று தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜீவ்-சிவரஞ்சனி. இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சம்பவத்தன்று சிவரஞ்சனி குழந்தையை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை தனது சாயலில் இல்லை என்ற கோபத்தில் இருந்த ராஜீவ் குழந்தையின் தொப்புள் கொடியை இழுத்து தரையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த சிவரஞ்சனி குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.