கொடூரமான முறையில் தாயை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செப்பபள்ளிவிலை பகுதியில் தேவராஜ்-சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரோஜினி மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு விஜயன் என்ற மகன் இருக்கிறார். இவர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன்காரணமாக விஜயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயன் மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயன் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வைத்து மது குடித்துவிட்டு மீதி பணத்தோடு வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வரும் வழியில் திடீரென மயங்கியுள்ளார். அவர் கண் விழித்து பார்த்த போது பையிலிருந்த பணத்தை காணவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விஜயன் என்னுடைய பணத்தை கொடு என்று தாயார் சரோஜினியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயன் ஒரு கட்டையை எடுத்து சரோஜினியை பலமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சரோஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் திருவட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரோஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜயனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.