திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில் ஆனந்தம் நகர் கோவிந்தசாமி தெருவில் சிவகுமார் என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கண்ணகி தெருவில் பூபதி என்பவர் வசித்துவருகிறார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் கட்டிட தொழில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்று மாலை முடிந்ததும் பணத்தை பங்கிட்டு காமராஜ் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனர். மேலும் சிவகுமாருக்கு கொடுக்க வேண்டிய ரூ.25 கேட்டதற்கு பூபதி கொடுக்கவில்லை.
இதையடுத்து குடிபோதையில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது சிவகுமாரை தகாத வார்த்தைகளால் பூபதி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் இரும்பு ராடை வைத்து பூபதி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் பூபதிக்கு காயம் ஏற்பட்டதையடுத்து சிவகுமாரிடமிருந்து ராடை பிடிங்கி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு பூபதி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆவடி போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.