திருட்டு வழக்கில் கைதான சிறுவன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன். இந்த சிறுவன் கடந்த 23ஆம் தேதி திருட்டு வழக்கில் நாமக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின் அந்த சிறுவனை போலீசார் சேலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அப்போது திருட்டு வழக்கில் கைதான அந்த சிறுவனின் கன்னம் வீங்கியிருந்தது. இதைப்பற்றி மாஜிஸ்திரேட் அந்த சிறுவனிடம் விசாரித்தார். அப்போது அந்த சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் இருந்தவர்கள் தன்னை அடித்ததாக கூறினான்.
இதனையடுத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் அந்த சிறுவன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அந்த சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் இரவில் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். பின் இதுபற்றி சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சிறுவனை அடித்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க அஸ்தம்பட்டி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் கலைவாணி உத்தரவிட்டிருக்கிறார். அதன்பின் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் தேவராஜா மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.