கர்நாடகாவில் ஓடும் பஸ்ஸில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் படா கிராமத்தை சேர்ந்தவர் வந்தனா(30 வயது ). இவருடைய அத்தை மகன் பிரவீன்(28 வயது) இவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பிரவீனும் வந்தனாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரவீனின் நடவடிக்கையை பிடிக்காமல் வந்தனா அவருடைய காதலை கைவிட்டதாக தெரிகிறது. மேலும் வந்தனா இன்னொரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்த பிரவீன் வந்தனாவிடம் வாலிபருடனான காதலை கைவிடும்படி கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வந்தனாவை மிரட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் வந்தனா கே.எம். ஆளூர் என்ற இடத்திலிருந்து படா கிராமத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் திடீரென்று ஏறிய பிரவீன் வந்தனாவின் அருகில் அமர்ந்து தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த வந்தனா மீது கடும் கோபம் கொண்ட பிரவீன் ஓடும் பஸ்சிலேயே வந்தனாவை சரமாரியாக கத்தியால் குத்தி அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரை தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பிரவீன் அவர் கையிலிருந்த கத்தியால் பயணிகளை மிரட்டியுள்ளார் .மேலும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்த வந்தனா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வந்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.